* ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல்: பயணிகள் ரெயில் தடம் புரண்டது * ஜெயலலிதாவுக்கு அவசர நோட்டீஸ்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு * பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கூடுதலாக பருப்பு, காய்கறிகள் வழங்க ஒப்புதல் * தமிழகம், புதுவையில் இன்றும் மழை வாய்ப்பு * முல்லை பெரியாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதாக கேரள முதல்-மந்திரி தகவல் * அணுஆயுத சோதனையை வடகொரியா கைவிட வேண்டும்: ஒபாமா * அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் பாடத்தில் தூய தமிழில் வகுப்பு * கோவையில் 25 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி

Download latha tamil font


Tamil Cine Directory as your Homepage


Choose your
theme

"அண்மை செய்திகள்,20/11/2009,காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,


லிபரான் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் மக்களவையை நடத்தவிடமாட்டோம்:அமர் சிங்


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கமிஷனின் அறிக்கையை, நாடாளுமன்றத்தின் இந்தத் தொடரின்போது தாக்கல் செய்யாவிட்டால் அவையை நடத்தவிடமாட்டோம் என்று சமாஜவாதி கட்சியின் சார்பில் அதன் தலைவர்களில் ஒருவரான அமர் சிங் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் பற்றிப் பேச நிருபர்களை வியாழக்கிழமை சந்தித்த அவர் தங்களுடைய கட்சி முக்கியமாகக் கருதும் அரசியல் பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷனின் அறிக்கை இóன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, அக்கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோரின் பங்கு குறித்து இந்த விசாரணைக் கமிஷன் விசாரித்துள்ளது. அத்துடன் அப்போது மத்தியில்ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் கமிஷன் விசாரித்திருப்பதாகத் தெரியவருகிறது.

எனவே அறிக்கையைத் தாக்கல் செய்தால் பாரதிய ஜனதா தலைவர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களும் அம்பலப்பட்டுவிடுவார்கள் என்பதால் அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் அரசு காலம் தாழ்த்துகிறது என்று சாடினார் அமர்சிங்.

மிகவும் முக்கியமான இந்த விவகாரம் குறித்து உடனே அறிக்கையை வெளியிட்டு பிறகு நீதிமன்றத்திலும் துரிதகாலத்தில் விசாரணை நடத்தி நீதி வழங்காமல் அரசு ஏன் தாமதம் செய்கிறது என்று தங்களுக்குப் புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தாரின் கேஸ் பங்கீடு வழக்கைப் போலவே இந்த வழக்கையும் அரசு அணுகுகிறது என்று கேலி செய்த அமர் சிங், இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ராவைக் கடுமையாகச் சாடினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகும் அரசு விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருப்பது ஏன், முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கிகளாகத்தான் காங்கிரஸ் கருதுகிறதா அல்லது அவர்களுடைய அரசியல் சித்து விளையாட்டில் அவர்கள் வெறும் பகடைக்காய்கள்தானா என்று அவர் கேட்டார்.

சிறுபான்மைச் சமூகத்தவரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துள்ள ஆர்.என். மிஸ்ரா கமிஷன் அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



  • மேலும் 13 சமத்துவபுரம் டிசம்பருக்குள் திறப்பு: மு.க.ஸ்டாலின் பேச்சு


    தூத்துக்குடி ராமனூத்து அருகே ரூ.2.75 கோடியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

    பின்னர், தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில், கிழக்கு கடற்கரை சாலை, 3ம் கேட் ரயில்வே மேம்பாலம், 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி கூடுதல் கட்டிடங¢களை திறந்து வைத்தும், மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஸ்டாலின் பேசியதாவது:

    சமத்துவபுரம் என்பது பெரியார் கண்ட கனவு. அதனால்தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் என பெயர் இடப்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமை உள்ளத்தோடு, ஒருமித்த கருத்தோடு, சாதி, மதங்களை கடந்து வாழ வேண்டும் என்றார் பெரியார். அவரது கனவு முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படுகிறது. சாதி கொடுமையை ஒழிப்பதற்காகத்தான் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 962001 திமுக ஆட்சியில் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரூ.14.5 கோடி ஒதுக்கி, சமத்துவபுரங்கள் பராமரிக்கப்பட்டன.

    மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டில் முதல் கட்டமாக 29 சமத்துவபுரங்கள் அறிவிக்கப்பட்டு 16 சமத்துவபுரங்கள் உருவாகியுள்ளன. எஞ்சியுள்ள 13 சமத்துவபுரங்களும் டிசம்பருக்குள் திறக்கப்படும்.

    அடுத்த ஆண்டில் 30 சமத்துவபுரங்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 36 சமத்துவபுரங்களும் உருவாக்கப்படும்.

    திமுக ஆட்சியில்தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக் குழு தொடங்கப்பட்டது. இன்று, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாபெரும் இயக்கமாக வளர்ந்து வந்திருக்கிறது.

    வங்கிகளில் பெற்ற கடன்களை மகளிர் குழுக்கள் முறையாக திருப்பி செலுத்தி 2வது, 3வது முறையாக கடன் பெற்றிருக்கிறார்கள். மகளிர் குழுக்கள் இன்னும் பல சிறப்புகளை பெற வேண்டும். அதற்காக வாழ்த்துகிறேன்.

    பெண்கள் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம், பெண்கள் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. எண்ணிப் பார்க்க முடியாத ஏராளமான திட்டங்களை நிறைவேற்றும் இந்த ஆட்சிக்கு என்றும் மக்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், கீதாஜீவன், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் பெரியசாமி, மேயர் கஸ்தூரி தங்கம், ஜெயதுரை எம்.பி., சுடலையாண்டி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக, கலெக்டர் பிரகாஷ் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வீரணன் நன்றி கூறினார்.


    அரியூர் சர்க்கரை ஆலை பிரச்னை புதுச்சேரியில்


    அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கை:

    புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னொரு தனியார் நிறுவனம் வாங்கிய போது, ஆலையின் வங்கி கடன் போக, மீதமுள்ள தொகை தொழிலாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப் பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாகியும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

    புதிய நிர்வாகம், ஆலையின் 375 தொழிலாளர்களில் 200க்கும் மேற்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.

    இதனால், இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும், லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உரிய கரும்பை தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு அனுமதித்துள்ளதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, புதுச்சேரி அரசு, அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், கரும்புக்கு ரூ.2,000 வழங்க வலியுறுத்தியும், 20ம் தேதி காலை 10 மணிக்கு, அரியூர் சர்க்கரை ஆலை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு விவசாய பிரிவு செயலாளர் துரை கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார்.



  • ஜெயலலிதாவுக்கு அவசர நோட்டீஸ்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு


    லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக 10 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 5 பேருக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா 1991-96 ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கும் லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் அந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் அந்த மனுவை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனய்யா தள்ளுபடி செய்தார்.

    சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜரானார். வழக்கை நீதிபதி ஜாவித் ரஹீம் விசாரித்தார்.

    லண்டன் ஹோட்டல் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், ஜே.இளவரசி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதற்காக அவர்கள் 5 பேருக்கும் அவசர நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கடந்த 27-6-2005 அன்று சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்தது. இதை எதிர்த்து திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 5-8-2005 அன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.



  • கரும்பு விலை விஷயத்தில் பணிகிறது மத்திய அரசு : ஆலோசிக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு


    மத்திய அரசின் புதிய கரும்பு விலை கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில், கரும்பு விவசாயிகள் நேற்று பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும், எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போர்க்கொடி உயர்த்தியதாலும், மத்திய அரசு பணிந்தது. கரும்பு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை வரும் திங்கள்கிழமை கூட்டியுள்ளது.

    மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், 2009-10ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில், "நியாயமான மற்றும் ஈடு செய் விலை' முறையின் அடிப்படையில், கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.129.85 வழங்கப்படும் என, அறிவித்தது. இதற்கு மேல் மாநில அரசுகள் ஏதாவது விலையை நிர்ணயித்தால், அவற்றை அந்த அரசுகளே வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள இந்த விலை, மிகவும் குறைவு என, கரும்பு விவசாயிகள் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் புதிய கரும்பு விலை கொள்கைக்கு எதிர்ப்புத் தெரி வித்தும், கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தியும், வடமாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், டில்லியில் நேற்று மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பேரணிக்கு அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம், பாரதிய கிசான் சங்கம், ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்கதன் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. ராம்லீலா மைதானத்தில் துவங்கிய பேரணி, மத்திய டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது. அவசர சட்டத்தை உடனே வாபஸ் பெறாவிட்டால், பார்லிமென்டிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடப்போவதாகவும், நிலைமை மேலும் மோசமாகும் என்றும் எச்சரித்தனர்.

    பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங் கூறுகையில், "பிரேசிலில் இருந்து கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கச்சா சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது வியப்பு அளிக்கிறது. "ஏழைகளின் வீடுகளுக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அவர்களின் நிலை பற்றி வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால், மத்திய அரசோ, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது' என்றார்.

    இப்பேரணியில் பேசிய சரத்யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) விவசாயிகளின் கோரிக்கை நிறைவடையும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றார். தற்போதைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்றார் முலாயம் சிங். கோபிநாத் முண்டே (பா.ஜ.,) பேசுகையில், "சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு உதவி செய்யவே பவார் விரும்புகிறார். விவசாய அமைச்சராக இருக்கும் அவர், விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும்' என்றார்.

    இதற்கிடையில், பிரபல விவசாய விஞ்ஞானியும், எம்.பி.,யுமான எம்.எஸ்.சுவாமிநாதன், ""கரும்பு விலைகள் குறித்து முடிவுசெய்ய நிபுணர்கள் அடங்கிய கமிட்டியை அமைக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்துள்ளார். பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று, டில்லியில் கரும்பு விவசாயிகள் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து மத்திய அரசு பணிந்தது.

    அரசின் கரும்பு கொள்கையில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வும் அதிருப்தி என்றறிந்த நிதியமைச்சர் பிரணாப், "எல்லா விஷயம் குறித்தும் அரசு பேசத் தயார்' என்றார். கரும்பு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து விவாதிக்க வரும் திங்களன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது. காலை உணவின் போது, இச்சந்திப்பு நடப்பதால், அன்று பார்லிமென்ட் சுமுகமாக நடக்கலாம். ஆனால் இன்று மீண்டும் பார்லிமென்டில் இப்பிரச்னை எழும் என்று கூறப்பட்டது.

    புதிய கரும்பு விலை கொள்கை தொடர்பாக பார்லிமென்டிலும், வெளியிலும் பெரிய அளவில் சர்ச்சை எழுந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேற்று சந்தித்துப்பேசினார். பிரதமருடனான சந்திப்பு பற்றி ராகுல் கூறுகையில், ""பிரதமரை நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன். அதுபோல் இன்றும் சந்தித்தேன். அவருடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தேன்,'' என்றார்.



  • மத்திய தகவல் தலைமை ஆணையர் யார்? அத்வானியுடன் இன்று ஆலோசனை


    மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையரை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலை வர் அத்வானி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணை யராக இருந்த வஜாஹத் ஹபிபுல்லா கடந்த மாதம் ராஜினாமா செய்தார். காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில தகவல் ஆணையத் தின் தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இவர் ராஜினாமா செய்து ஒரு மாதமாகியும் புதிய தலைமை ஆணையர் யார் என்பதை மத்திய அரசு இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறது.

    புதிய தலைமை ஆணையரை அறிவிக்கும் முன்பாக, அவரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஆகியோருக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதி உள்ளனர். மேலும், அரசு சார்பற்ற ஒருவரை இந்த பதவிக்கு நியமிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 3 பெயர் பரிசீலனை: விமான போக்குவரத்துத் துறை செயலாளர் மாதவன் நம்பியார், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஷேகர் சிங், தகவல் ஆணையர் திவாரி ஆகியோரின் பெயர்கள், தலைமை ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை இந்த பதவிக்கு நியமிக்கும் படியும் பல்வேறு முக்கிய சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், பிரதமர் மனமோகன் சிங் நாளை அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அதற்கு முன்பாக இந்த பதவியை நிரப்ப அவர் திட்டமிட்டுள்ளார். இந்த பதவியில் யாரை நியமிப்பது என்பது பற்றி அத்வானி, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோருடன் இன்று மாலை அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.


    இன்றைய செய்திப் புகைப்படங்கள்























    வெள்ள பாதிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அ.தி.மு.க. குற்றச்சாட்டு


    தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

    மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து தென் ùன்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எச். பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.பி. கலைராஜன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் பி.எச். பாண்டியன் பேசியதாவது:

    அண்மையில் பெய்த மழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகமெங்கும் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை நகரின் பல சாலைகளில் குளம் போல் நீர் தேங்கியது.

    மாம்பலம் கால்வாய், அடையாறு கால்வாய்களை மழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தியாகராய நகர், சைதாப்பேட்டை உள்பட சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகள் கற்குவியல்களாக மாறிவிட்டன.

    வெள்ளச் சேதங்களைத் தடுக்க தி.மு.க. அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே இந்த பாதிப்புகளுக்கெல்லாம் காரணம். மழைக்காலம் இன்னும் முடியவில்லை. எனவே இனியாவது மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு தி.மு.க. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் பி.எச். பாண்டியன்.

    ஆர்ப்பாட்டத்தில் சைதாப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தமிழன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.























    தமிழகம், புதுவையில் இன்றும் மழை வாய்ப்பு


    தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஈரப்பதமுள்ள மேகக் கூட்டங்கள் திரள வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    திருப்புவனத்தில் 100 மில்லி மீட்டர் மழை: தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதர இடங்களில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

    நீடாமங்கலம் 60, குடவாசல், பேராவூரணி, திருச்செந்தூர் 50, செம்பரம்பாக்கம், சாத்தனூர் அணை, திருப்பத்தூர், சூளகிரி 40, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், பாரூர், ராஜபாளையம் 30, உத்திரமேரூர், விருத்தாசலம், வானூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, போளூர், குன்னூர், திருப்பத்தூர் 20.

    அறந்தாங்கி, ஆர்.எஸ். மங்கலம், கும்பகோணம், பள்ளிப்பட்டு, காஞ்சிபுரம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சீர்காழி, கொள்ளிடம், பரமக்குடி, தொண்டி, பாளையங்கோட்டை, மணியாச்சி, சூரங்குடி, ஆலங்காயம், பாப்பிரெட்டிபட்டி, ஒசூர், ஊத்தங்கரை, ஏற்காடு, கோயம்புத்தூர், காரைக்குடி 10.

    தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    Bookmark and Share

    அக்டோபர் மாதம் நான்காம் நாள் அண்மை செய்திகள்




    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission

    DESIGNED AND HOSTED BY "Tamil Cine Directory"- Monthly Tamil Cinema Magazine

    send your comments and corrections